India
via IdlyVadai - இட்லிவடை by IdlyVadai on 12/31/10
அதைப்போலத்தான் ஹிந்தி, குஜராத்தி மொழிகளைத் தெரிந்திருக்காமலும் உணவுமுறை, பழக்கவழக்கங்கள் பற்றி எதுவும் அறிந்து கொள்ளாமலும் ஏற்கனவே பார்த்திருந்த ஒரு நல்ல வேலையை விட்டுவிட்டு ஒரு அசட்டுத்தைரியத்துடன் குஜராத்திற்கு வந்தேன். அப்போதைக்கெல்லாம் நான் குஜராத் பற்றி அறிந்திருந்தது டாண்டிய டேன்ஸ், குஜராத் நிலநடுக்கம், மதக்கலவரம் இம்மூன்று தான்!
“There is no red tapism in my state, all red carpets” அப்படி ஒரு சிவப்புக் கம்பள வரவேற்பையேற்று கோட்டைக்குள் நான் குடிபுகுந்து இதுவரை ஒன்றரை ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன !! :-) ”வைப்ரண்ட் குஜராத்” - (பேரக் கேட்டாலே அதிருதுனு சொல்றது இதுதானோ?)
குஜராத்துக்கு வந்ததிலிருந்து இங்கே நடக்கும் ஆட்சிமுறையைக் கண்கூடாகக் கண்டுவரும் நான் நவம்பர் மாதம் விடுமுறை எடுத்துக்கொண்டு தமிழ்நாட்டுக்கு வந்த சமயம் குஜராத்திலிருந்து முதல்வர் நரேந்திர மோடியும் தமிழ்நாட்டுக்கு வந்திருந்தார். என் அனுபவகளை இந்த கட்டுரையில் தருகிறேன்.
- தமிழகத்தின் வியாபரிகளைக் குஜராத்திற்கு வரவேற்றும் 24 மணிநேரமும் தடையில்லாத தரமான மின்சார இணைப்பு, சிறந்த உள்கட்டமைப்பு(infrastructure), ஒளிவுமறைவற்ற அரசாங்கம் ஆகியவற்றை வழங்குவதாகவும் கூறியிருந்தார்.
- கல்வி அளிப்பது ஒரு சமூக சேவை எனவும் வியாபார நோக்கில் கல்வி நிறுவனங்கள் செயல்படக்கூடாது எனவும் அத்தகைய எண்ணமுடையவர்கள் குஜராத்திற்கு வரவேண்டாம் என்றும் வெளியிடங்களில் உள்ள குஜராத் மக்கள் கூட இதை மனதில் வைத்தே செயல்படுவதாகவும் கூறினார். 60 சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் போக 13 சிறப்பு முதலீட்டு மண்டலங்களையும் நிறுவி தொழிற்சாலைகள் வளர்வதை ஊக்குவித்து வருவதாகவும் பேசினார்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhJkUeOZGz6xYXr4padlxlf1GHZ9syqiHi5z7_gs_412e2ulBSGyi1M7IDcAtJQvRvVNoM56gwYK0Kc4mPkBR20LxWTNbl9DiP34yjCwwO7sDh_niuuqb09AG_afZ-BZSyLANHyEkcKb7Dv/s400/vbg.jpg)
- காந்திஜி கூறியது போல இரவு நள்ளிரவில் கூட பெண்கள் சாலைகளில் தனியே நடந்துபோக குஜராத்தில் சாத்தியமுண்டு! (Dry State என்பதாலா?)
நான் வேலை செய்யும் வங்கிக்கு வருகை தரும் பல்வேறுபட்ட வாடிக்கையாளர்களிடம் அணுகியபோதும் அவர்களிடம் தனியே உரையாடிய போதும் குஜராத்தில் நடைபெறும் நல்லாட்சியைப் பற்றி நான் அறிந்துகொண்டவை அதிகம். என்னுடைய ஒன்றரை ஆண்டு குஜராத் வாசத்தில் ஒருமுறையேனும் ஒருவர்கூட இங்கு நிலவும் ஆட்சியைப் பற்றிக் குறைகூறி நான் கேட்டதில்லை! இங்கே அரசியல் கட்சி ஆர்ப்பாட்டங்கள் இல்லை. இலவச மின்சாரம் என்று அறிவித்துவிட்டு மின்சாரத்தைத் துண்டித்துவிடும் அவலம் இல்லை!
”சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்” என்பதை ஆதரிக்கும் வகையில் விவசாயத்துறையில் பல்வேறு நவீன யுத்திகளைப் பயன்படுத்தியும் பல பயனுள்ள செயல்திட்டங்களையும் சலுகைகளையும் வழங்கி ஊக்குவித்தும் லாபம் கண்டு வருவதைக் கண்கூடாகக் காணமுடிகிறது. மேலும் SME(Small and Medium Enterprises) துறையினரும் குஜராத்தில் கலக்கிக் கொண்டிருக்கின்றனர். அடுத்த தேர்தலைக் குறிவைக்காமல் அடுத்த தலைமுறையினரின் நலனைக் குறிவைத்து நலத்திட்டங்களை நிறுவிச் செயல்படுத்தி வரும் இதைப்போன்ற அரசே நல்லரசாக இருக்கமுடியும்…!
மேலும் ”CONVENIENT ACTION – GUJARAT’S RESPONSE TO CLIMATE CHANGE” என்று தற்போது பெரிதாகப் பேசப்பட்டுவரும் பருவ நிலை மாற்றத்தைப் பற்றி ஒரு புத்தகம் வெளியிட்டுள்ளார் திரு.மோடி அவர்கள். முன்னாள் குடியரசுத் தலைவர் திரு. அப்துல்கலாம் அவர்களும் 2007-ம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசை IPCC மற்றும் அல்கோரேயுடன் பகிர்ந்துகொண்ட திரு. ஆர்.கே.பச்சோரி அவர்களும் அந்தப் புத்தகத்தைச் சிறந்த படைப்பு என விமர்சனம் செய்துள்ளனர்.
“Generally after a rainfall, the rainwater disappears; in our places soon after the rainfall, the road disappears” இதைப்போன்ற சாலைகளை மட்டுமே பெருமளவில் நம்மூரில் பார்த்துப் பழகிய கண்களுக்குக் குஜராத்தின் பரந்து விரிந்த அகலமான சாலைகள் மகிழ்ச்சியைத் தந்தன. நம் அளவிற்கு நவீனப் பேருந்துகள் இங்கே அரிது என்றாலும், பேருந்தில் ஏறியவுடன் வில்லா, குருவியா, வேட்டைக்காரனா என்பதைப் போன்ற எந்தவித அச்சப்பாடும் இல்லாமல் ஏறலாம். அவரவர்க்குப் பிடித்த பாடல்களை அவரவர் அமைதியாகக் கேட்டுக்கொண்டு வரலாம். புத்தகம் படிக்கலாம். ப்ளாகில் எழுதுவதற்காகக் கவிதையோ கட்டுரையோ கதையையோ பற்றி யோசிக்கலாம். குறிப்பாகக் கைப்பேசியில் ஆங்கிலம் கலக்காத செம்மொழியாம் தமிழ்மொழியில் சத்தமாக (நாம் மட்டும்) பே(ஏ)சிக்கொண்டே வரலாம். கேட்பவர்க்குப் புரியாது. அப்படியே புரிந்துகொண்டு செல்லமாக அவர்கள் நம்மைத் திட்டினாலும் அது என்னவென்று நமக்குப் புரியாது :-)
பேருந்தில் ஒருபாதியைப் பெண்களுக்காக ஒதுக்கிவைத்துப் பார்த்துப் பழகிய என் கண்களுக்கு ஒருவரையொருவர் யாரென்றே தெரியாதவர்கள் ஜோடிஜோடியாக அமர்ந்து பயணம் செய்வதைப் பார்ப்பது முதலில் வேடிக்கையாக இருந்து இப்போது வாடிக்கையாகிவிட்டது.
பள்ளியிலும் கல்லூரியிலும் இலக்கியப்பாடங்கள் பற்றிய வகுப்புகளில் முந்திரிக்கொட்டை போல பதில்சொல்லிப் பழகிவிட்டு அலுவலகத்தின் சார்பில் நடந்த குஜராத்தி மொழி வகுப்பில் திருதிருவென்று விழித்துக்கொண்டு இருந்ததை மறக்கவே முடியாது! ஒருமுறை வகுப்பில் ஹிந்தியில் மாணவர்கள் ஒவ்வொருவரும் ஒரு வரியைக் கூற ஆசிரியர் அதைக் குஜராத்தியில் மொழிபெயர்த்துக் கூறிக்கொண்டே வந்தார். அப்போது என்முறை வர என்னால் ஹிந்தியில் எதுவும் சொல்லமுடியாமல் போக, தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்து விட்டிருந்தேன். உடனே வகுப்பில் அமர்ந்திருந்த என்னுடன் பணியில் சேர்ந்திருந்த தமிழ் மாணவர் ஒருவர் சிறிதும் யோசிக்காமல் “ஏக் காவ் மே ஏக் கிசான் ரகு தாத்தா” என்று படபடவென்று கூறிவிட்டு அமைதியாக இருந்துவிட ஆசிரியரும் அதைக் கடமையே கண்ணாக மொழிபெயர்த்து கரும்பலகையில் எழுதிக்கொண்டிருக்க அதைப் பார்த்தவுடன் எனக்கு அழுத கண்ணீரெல்லாம் ஆனந்தக்கண்ணீர் ஆகிவிட்டது :-)
குஜராத் என்றாலே நவராத்திரி நாட்கள் தான் முதலில் நம் நினைவுக்கு வருபவை. நவராத்திரி ஸ்பெஷல் சோளிகளை அணிந்துகொண்டும் அழகாக அலங்கரித்துக் கொண்டும் பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் என அனைத்து வயது பெண்களும் கூடிநின்று “கர்பா” ஆடுவது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். திருமணம் போன்ற சடங்குகளின் போதும் கூட இதைப்போன்ற நடனங்கள் தெருக்களை அமர்க்களப்படுத்தும். பல சமயங்களில் வாகனப் போக்குவரத்திற்கு இவை இடையூறை ஏற்படுத்தினாலும் கொஞ்சம்கூட முகம் சுளிக்காமல் சாலையில் செல்லும் பிறமனிதர்களைப் பார்க்கும்போது கொஞ்சம் ஆச்சர்யப்படுவதை மீறி அவர்கள்மீது நமக்குப் பொறாமை ஏற்படுவதை உணர்ந்து கொள்ள முடியும்.
இதை நான் சொல்லியே ஆகவேண்டும்! விடுமுறைகள் எடுத்துக்கொண்டு ஊருக்கு நான் வந்திருக்கும் நாட்களில் குஜராத்தை நான் மிஸ் பண்ணுவதாக உணர்ந்தால் என்னளவில் அதற்கு ஒரே ஒரு முக்கிய காரணம் தான் இருக்க முடியும். அது சுடச் சுட(வேகத்தைச் சொன்னேன்) மசாலாவைப் பூரியினுள்ளே வைத்துப் பானியில் முக்கித் தட்டில் வைக்க வைக்க உடனுக்குடன் மாயமாக மறைந்து போகும் “பானிப்பூரி”யாகத் தான் இருக்கும்! :-) எவ்வளவு பார்த்துப் பார்த்து வீட்டில் அதே மாதிரி செய்து பார்த்தாலும் தெருவோரத் தள்ளுவண்டியில் வாங்கிச் சுவைத்த அந்தச் சுவை மட்டும் வரவே வராது!!
குஜராத்தைப் பற்றி நான் வேறு ஏதாவது சொல்லாமல் விட்டிருந்தால் அதை அடுத்த கட்டுரையில் சொல்லுகிறேன். போட தான் இட்லிவடை ரெடியாக இருக்கிறாரே :-)
என்று கூறிக்கொண்டு வாய்ப்பளித்தமைக்கு நன்றி கூறி என் உரையை முடிக்கிறேன்… நன்றி… வணக்கம்! அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்…!! :-)
அன்புடன்
சுபத்ரா @ http://subadhraspeaks.
கட்டுரை ஆசிரியர் A.R.சுபத்ராதேவி. இளமறிவியல் கணிதவியல் பட்டதாரி. பிறந்தது, வளர்ந்தது, படித்தது எல்லாமே திருநெல்வேலியில் தான். முன்னர் தமிழ்நாடு சிறப்புக் காவலில் ஜூனியர் அசிஸ்டெண்ட்டாகவும் பின் பாண்டியன் கிராம வங்கியிலும் பணியாற்றி தற்போது அகமதாபாத், குஜராத்தில் பாரத ஸ்டேட் வங்கியில் பணியாற்றி வருகிறார். சிவில் சர்விஸஸ் தேர்வுக்கும் தயாராகி வருகிறார். ஒரே கெட்ட பழக்கம் கவிதை எழுதுவார்.
Comments
Post a Comment